மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும் என சிவசேனா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று இருந்தாலும் இரு கட்சிகளிடையே நிலவி வரும் சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

முதல்வர் பதவியை பாஜகவுக்கு முழுமையாக விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற நிலையில் உறுதியாக உள்ளது. ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள பாஜக தயக்கம் காட்டி வருவதால் குழப்பம் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் நேற்று மாலை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதனால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. 

இதற்கிடையே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இன்று அவர் கூறுகையில், “சிவசேனா நினைத்தால், மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற முடியும். 50-50 என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். சிவசேனாவில் இருந்து முதல்வர் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் நினைத்தால் வேறு வழியில் ஆட்சியமைக்க முடியும் என பாஜகவை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.