மகாராஷ்டிராவில் பல்வேறு நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 செவிலியர் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,45380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4167ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 60,491 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 52,667 ஆக உயர்ந்துள்ளது. 1695 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 15,786 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200  செவிலியர்கள் கடந்த சில நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் கேரளாவுக்கு திரும்பி சென்று விட்டனர். அவர்கள் ராஜினாமாவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மேங்கு வங்கத்தில் 600-க்கு மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.