Asianet News TamilAsianet News Tamil

சாமியே..!சரணம் ஐயப்பா..! விண்ணை முட்டிய கோஷம்.. சபரிமலையில்’மகர ஜோதி தரிசனம்’

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் ஒரு பகுதியாக மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மகரஜோதி தோன்றியதை அடுத்து மலைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் சரணம் ஐயப்பா என்று கோஷம் விண்ணை பிளக்கும் அளவிற்கு எழுப்பப்பட்டது.
 

Maharajothi in Sabarimala: Darshan by thousands of devotees
Author
Kerala, First Published Jan 14, 2022, 8:53 PM IST

சபரிமலையின் பொன்னம்பல மேட்டில் தோற்றும் மகரஜோதியை தரிசித்தால் செல்வங்கள்சேரும், பாவங்கள் தொலையும் என்பது ஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை. இதனால் கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுவந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிகஅளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது. அதன்காரணமாக சபரிமலையில் இந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சபரி மலை சன்னிதானம் மட்டுமின்றி, பம்பா, நீலிமலை உள்ளிட்டஅனைத்து மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

Maharajothi in Sabarimala: Darshan by thousands of devotees

இன்று சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்கத்தினால் ஆன ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பந்தள ராஜகுமாரணாக அரசக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை சற்றுமுன் தீபாராதனை தொடங்கியது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.அப்போது வானில் மகர நட்சத்திரமாக ஐயப்பன் தோன்றியதாக ஐதீகம். அதேநேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பிரகாசமாக தோன்றியது. அது ஐயப்பனின் ஜோதிவடிவம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஜோதியின்போது, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களால் விண்ணை முட்டியது.

முன்னதாக் மகர விளக்கு பூஜை மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஐயப்பனுக்கு சார்த்தி அலங்கரித்து அழகுபார்க்கும் பந்தள மகாராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய 'திருவாபரண' ஊர்வலம், பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க கால்நடை ஊர்வலமாக புறப்பட்டு இன்று சபரிமலை வந்தடைந்தது.

Maharajothi in Sabarimala: Darshan by thousands of devotees

இதனிடையே மதியம் 12.29 மணிக்கு சபரிமலையில் 'மகர சங்கிரம' பூஜை நடந்தது. பின்னர் இந்த பூஜையில் பந்தளம் அரண்மனையிலிருந்து அரச பரம்பரையை சேர்ந்த உறுப்பினர் கொண்டுவந்த நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அந்த நேரம் திருவாபரண ஊர்வலம் பம்பை, சரன்கொத்தி வழியாக சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது.அங்கு ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக்கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்தினார். மாலை 06.00 மணியில் இருந்து 06.30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.

மேலும் பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.  மகரஜோதி தோன்றியதை அடுத்து மலைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் சரணம் ஐயப்பா என்று கோஷம் விண்ணை பிளக்கும் அளவிற்கு எழுப்பப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios