மும்பை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மகாலட்சுமி எக்ஸ்பிரஸின் வீடியோ காட்சி ஒன்று அந்தப் பயணிகள் எவ்வளவு பெரிய ஆபத்துக்கு நடுவே சிக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது. அந்த ரயிலின் கம்பார்ட்மெண்டுக்குள் தண்ணீர் புகுந்து வரும் நிலையில் 700 பேரும் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பெய்த பெருமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்த வேலையில் நேற்று (ஜூலை 26) முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்த்ததால் சயான், மட்டுங்கா, மகிம், அந்தேரி, மலாட், தகிசர், கல்யாண், செம்பூர், சாண்டா க்ரூஸ் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.

இதனால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மும்பையில் பாதிக்கப்பட்டுள்ளது. 11 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து வெளியூருக்குச் செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கோலாப்பூர் - மும்பை இடையே இயங்கும் மகாலட்சுமி விரைவு ரயில், பத்லப்பூர் - வாங்கனி இடையே, தண்டவாளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் இயக்க முடியாமல் நின்றுள்ளது. இந்த ரயிலில் குழந்தைகள் பெண்கள் 700 பேர் பயணித்துள்ளனர். முதலில் 2000 பேர் சிக்கியிருப்பதாக வெளியான தகவலைத் அடுத்து 700 பயணிகள் ரயிலில் சிக்கியிருப்பதாக மும்பை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் ரயில் சிக்கிய வீடியோக்களும், புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களைப் படகு மூலம் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. மூன்று குழுவினர்களாகப் பிரிந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன, முதல்கட்டமாக குழந்தைகள் பெண்கள் என 117 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பயணிகள் அத்தனை பேரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள கிராமம் ஒன்றுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்கிற விபரம் தெரியவில்லை.

பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட பகீர் வீடியோ இதோ...