மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல்: மத்திய அரசு பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை கைவிடுவதா என மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு மத்திய அரசு பதில் அளித்து வருகிறது. அந்த வகையில், “மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2020 என்ன நிலைமையில் உள்ளது? இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” ஆகிய கேள்விகளை மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2013-யை திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசிடம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அளித்துள்ள இந்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., “மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை கைவிடுவத?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம்: விதி எண் 267 மற்றும் 176 என்ன வித்தியாசம்?
இதுகுறித்து அவர் கூறுகையில், “மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த சட்ட வரைவு 2020 என்பது கழிவு அகற்றுவதை முழுமையாக இயந்திர மயம் ஆக்குவதே நோக்கம் கொண்டது என்றே தகவல்கள் தரப்பட்டு இருந்தன. இத்தகைய சட்டம் துப்புரவு பொறியியலை மேம்படுத்துவது, பல்கலைக்கழகங்களில் சிறப்பு துறைகள் உருவாக்குவது ஆகிய முன் முயற்சிகளுக்கு உதவி செய்யக் கூடும்; மேலும் 2013 சட்டத்தை வலுப்படுத்துவதற்கான வழி வகைகளையும் செய்ய இயலும். ஆனால் அமைச்சரின் பதில் அரசாங்கத்தின் அரசியல் உறுதி மீது பெரும் ஐயத்தை உருவாக்குவதாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், “மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2020 இன் உள்ளடக்கத்தை பொது வெளியில் சுற்றுக்கு விட்டு கருத்துக்களைப் பெற்று முழுமையான இயந்திர மயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடியாது, மனித உயிர்கள் பறி போவதை தடுத்து நிறுத்தவும் முடியாது.” எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.