மணிப்பூர் விவகாரம்: விதி எண் 267 மற்றும் 176 என்ன வித்தியாசம்?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், 176இன் கீழ் விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.
இந்த விவகாரத்தில் விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. ஆனால், விதி எண் 176இன் கீழ் விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விதி எண் 267 என்றால் என்ன?
ராஜ்யசபா விதி 267இன் படி, சபையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அலுவல்களை இடைநிறுத்தி, தலைவரின் ஒப்புதலுடன் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. அனைத்து அலுவல்களையும் நிறுத்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேசப்பிரச்சினைகளை விவாதிக்கக் கோரும் வகையில் எந்தவொரு ராஜ்யசபா உறுப்பினருக்கு சிறப்பு அதிகாரத்தை இந்த விதி வழங்குகிறது.
இந்த விதியின் கீழ், ராஜ்யசபா எம்.பி.க்கள் பட்டியலிடப்பட்ட அனைத்து அலுவல்களையும் இடைநிறுத்துவதற்கு எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கலாம். நாடு எதிர்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்கலாம். இதனுடன், அரசின் கேள்விகளும் பதில்களும் இடம்பெறும். விதி 267இன் கீழ் ஒரு பிரச்சினை விவாதிக்க ஒப்புக் கொண்டால், அது அன்றைய மிக முக்கியமான தேசியப் பிரச்சினை என்பதைக் குறிக்கிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 4ஆவது நாளாக முடங்கியது!
மேலும், 267 விதியின் கீழ் விவாதத்தின் முடிவில் குறிப்பிட்ட விவகாரத்திற்கு அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். வேறு எந்த வகையான விவாதமும் அன்று நடைபெறாது. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைக்க வேண்டும். விரிவான, நீண்ட விவாதம் நடைபெறும். உதாரணமாக, மணிப்பூரில் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் விதி எண் 267 அமலுக்கு வந்தால், இந்த விவகாரம் மட்டும் அமர்வில் விவாதிக்க அனுமதிக்கப்படும். விவாத்தத்துக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால், விவாதத்தின் போது, பிரதமர் அவையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
விதி எண் 176 என்றால் என்ன?
விதி எண் 176 என்பது குறுகிய கால விவாதத்தை குறிக்கிறது. ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் அல்லது தீர்மாணிக்கப்பட்ட நேரத்தில் குறுகிய கால விவாதம் நடத்தப்படுகிறது. இரண்டரை மணி நேரத்துக்கு மிகாமல் விவாதம் நடத்தப்படும்.
எந்தவொரு உறுப்பினரும் அவசரமான பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் மீது விவாதிக்க விதி எண் 176இன் கீழ் எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அளிக்கலாம். அவைத்தலைவர் திருப்தி அடைந்தால், எழுப்பப்படும் விஷயம் அவசரமானது மற்றும் போதுமான பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் இந்த விதியின் கீழ் விவாதம் நடத்த அவைத்தலைவர் ஒப்புதல் அளிப்பார். இந்த விதியின் கீழ் அளிக்கப்படும் நோட்டீஸில் குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதற்கு மூத்த அமைச்சர்கள் பதிலளித்தால் போதும்.
கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை, 11 சந்தர்ப்பங்களில் மட்டுமே விதி எண் 267 இன் கீழ் விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக, மாநிலங்களவைத் தலைவராக ஹமீத் அன்சாரி இருந்த போது, பணமதிப்பிழப்பு விவகாரத்திற்காக இந்த விதியின் கீழ் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டார். ஹமீத் அன்சாரி அவைத்தலைவராக இருந்த 2007 முதல் 2012 மற்றும் 2012 முதல் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 4 முறை இந்த விதியின் கீழ் விவாதம் நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். வெங்கையா நாயுடு, 2017 முதல் 2022 வரை தனது ஐந்தாண்டுகால பதவிக் காலத்தில், ஒருமுறை கூட இந்த விதியின் கீழ் விவாதம் நடத்த ஒப்புதல் தரவில்லை.