சிந்தியா வெளியேறியதில் கவலைப்பட ஒன்றுமில்லை, நாங்க பெரும்பான்மையை நிரூபிப்போம் என மத்திய பிரதேச முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் தெரிவித்தார்.

மத்திய பிரதேச காங்கிரசில் பல மாதங்களாக புகைச்சல் இருந்து வந்தது. 18 ஆண்டுகளாக அந்த கட்சிக்கு விசுவாசமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாதான் அந்த புகைச்சலுக்கு முக்கிய காரணம். கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமே அவர்தான். ஆனால் அவருக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல் கமல் நாத்துக்கு கொடுத்தது காங்கிரஸ் மேலிடம். இது ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பெரும் மனவருத்தத்தை கொடுத்தது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் அது குறித்தும் காங்கிரஸ் மேலிடம் வாயை திறக்கவில்லை.

இதனால் வெறுத்து போன ஜோதிராதித்ய சிந்தியா கடைசியில் நேற்று அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த உடனே, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை காங்கிரஸ் வெளியேற்றியது. சிந்தியாவுடன் அவரது ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியிலிருந்து விலகினர். இதனால் மத்திய பிரதேசத்தில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பெரும் சிக்கல் எழுந்தது. சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிலிருந்து விலகியதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல் நாத்தோ இன்னும் நம்பிக்கை தளராமல் உள்ளார். சிந்தியாவின் கிளர்ச்சி தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு கமல் நாத் பதில் அளிக்கையில், அது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். எங்க அரசு அதன் ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறுகையில், முதல்வர் கமல் நாத் ராஜினாமா செய்ய மாட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம். அதில் வெற்றிபெறவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.