சீதாபூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், திருமண ஆசை காட்டி தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது பார்ட்னர் மீது புகார் அளித்துள்ளார். வங்கி ஊழியரான ஆஷிஷ் குமார் மீது வழக்குப் பதிவு.

திருமணம் செய்ய மறுத்த தனது லிவ்-இன் பார்ட்னர் மீது ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார். லக்னோவின் சீதாபூரைச் சேர்ந்த வங்கி ஊழியரான ஆஷிஷ் குமார் என்பவருக்கு எதிராகவே இந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஆஷிஷ் குமாரை இன்னும் கைது செய்யவில்லை. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.

புகார் அளித்தவர் சீதாபூரில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் பேருந்தில்தான் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அந்த பயணத்தின் போது ஆஷிஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக மாறி நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. பின்னர், திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பலமுறை அவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

விவாகரத்தான புகார்தாரருக்கு முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை அவர்தான் வளர்த்து வருகிறார். ஒன்றாக வசிக்கும்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற புகார்தாரரின் கோரிக்கையை ஆஷிஷ் நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்தே, அந்த பெண் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.