ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி மாயம்.. ஸ்கெட்ச் போட்டு லாரியோடு தூக்கிய சம்பவம்..
கோலாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி மாயமானது.

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள 11 டன் தக்காளி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முனிரெட்டி என்ற வியாபாரி அளித்த புகாரின் பேரில் கோலார் டவுன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் முனிரெட்டி, ஜெய்ப்பூரில் உள்ள மூன்று வியாபாரிகளுக்கு தலா 15 கிலோ கொண்ட 735 பெட்டி தக்காளிகளை லாரி மூலம் அனுப்பி உள்ளார்.
ஒவ்வொரு தக்காளி பெட்டியும் ரூ.2,000 முதல் ரூ.2,150 வரை வாங்கியதாகவும், ஜூலை 27 மதியம் பெட்டிகளை ஏற்றி வந்ததாகவும் முனிரெட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் “ ஓட்டுநரின் எண், வாகனப் பதிவு எண் மற்றும் பிற விவரங்கள் ஜெய்ப்பூர் வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நானும், ஜெய்ப்பூர் வர்த்தகர்களும் தொடர்ந்து தக்காளியை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தக்காளி ஏற்றுச்சென்ற லாரி, ஜூலை 29 அன்று இரவு 11 மணிக்கு ஜெய்ப்பூரை அடைய திட்டமிடப்பட்டது. ஆனால் சனிக்கிழமை மாலை முதல், டிரைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, மேலும் லாரியில் இருந்த ஜிபிஎஸ் டிராக்கரும் கூட லாரியின் இருப்பிடத்தை காட்டவில்லை.
உடனடியாக, லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் ஜெய்ப்பூர் வர்த்தகர்களும் டிரைவரை தொடர்பு கொண்டு வாகனத்தின் நகர்வைக் கண்டறிய முயன்றனர், ஆனால் அவர்களாலும் கண்டறியமுடியவில்லை. இதைத் தொடர்ந்து லாரி, உரிமையாளர் மற்றும் இரண்டு கோலார் வணிகர்களின் பிரதிநிதிகள் வாகனத்தைக் கண்டுபிடிக்க ஜெய்ப்பூருக்குச் சென்றனர்.”என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் இருந்து கோலாருக்கு ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது. அதிக பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ள மாவட்ட விவசாயிகள், காய்கறிகள் ஏற்றிச் செல்லும் பெட்டிகளை மர்மநபர்கள் திருடிச் செல்வார்களோ என்ற அச்சம் நிலவுவதால், இரவு முழுவதும் தங்களது விளைபொருட்களை பாதுகாத்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்கு அருகில் கூடாரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
கோலார் டவுன் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் பேசிய போது, விலையுள்ள தக்காளியை பாதுகாக்க ஏபிஎம்சி யார்டு அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஓடும் ரயிலில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய RPF வீரர்.. 4 பேர் பலியான சோகம்..