கைய வச்சு பாருங்க அப்போ தெரியும்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை!
மக்களவைத் தேர்தல் 2024 இரு சித்தாந்தங்களுக்கானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாங்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள் பொது சாதி மற்றும் சிறுபான்மையினருக்கு பங்கு இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்.” என்றார்.
“இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது ஜாதியினர் தங்கள் மக்கள் தொகை மற்றும் நாட்டில் உள்ள பங்கேற்பு பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இது முதல் படி - ஒரு புரட்சிகர நடவடிக்கை. புரட்சிகர அரசியல் தொடங்கிய பிறகு, மக்களுடைய அரசியல் தொடங்கும்.” என ராகுல் காந்தி சூளுரைத்தார்.
இந்த 2024 தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலானது என்ற ராகுல் காந்தி, “தேர்தலில் வெற்றி பெற்றால். நாட்டின் அரசியல் சட்டத்தை முடித்து விடுவோம் என்று முதல் முறையாக ஒரு அரசியல் கட்சி (பாஜக) நாட்டுக்கு கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பு ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. இன்று பாஜகவின் உயரிய தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு புத்தகத்தை கிழித்து எறிந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். பாஜகவின் அனைத்துத் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் - உலகில் எந்த சக்தியும் இந்தப் புத்தகத்தைத் தொட முடியாது.” என்றார்.
செங்கல்பட்டு சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் உங்களுக்கு என்ன செய்யும் என்பதை பாருங்கள் என ராகுல் காந்தி அப்போது எச்சரிக்கை விடுத்தார்.
ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7ஆவது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.