Lok sabha Election Results 2024 எந்த கட்சிக்கு எத்தனை இடங்களில் வெற்றி - முழு விவரம்!
மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் முழுவதுமாக வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையம் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியும் களம் கண்டன. மக்களவைத் தேர்தல் 2024இல் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நேற்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திமுக தான் போட்டியிட்ட 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
நல்லவேள.. பாஜக இந்த 2 முக்கிய முடிவுகளை மட்டும் எடுக்கலன்னா.. ஆட்சியே போயிருக்கும்..
அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 9, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) 8, ராஷ்ட்ரிய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 2, ஆம் ஆத்மி 3, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதாதளம் 12, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 7, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 1, லோக்ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 தொகுதிகளிலும் வெற்றி வெற்றுள்ளது.