நல்லவேள.. பாஜக இந்த 2 முக்கிய முடிவுகளை மட்டும் எடுக்கலன்னா.. ஆட்சியே போயிருக்கும்..
மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக எடுத்த 2 முக்கிய முடிவுகள் தான் இப்போது மத்தியில் ஆட்சியமைக்க உதவி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துகணிப்புகள் கணித்திருந்தன. ஆனால் இந்த கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக பாஜக கூட்டணி 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-லும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
ஆனால் அதே நேரம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் இல்லாத திரிணாமூல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக எடுத்த 2 முக்கிய முடிவுகள் தான் இப்போது மத்தியில் ஆட்சியமைக்க உதவி உள்ளது.
சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி : என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி இரண்டுமே தங்கள் கூட்டணியில் மாநில கட்சிகளை கொண்டு வருவதற்கு மும்முரமாக இருந்தது. இந்த சூழலில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதிலாக சந்திர பாபு நாயுடுவுடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்தது.
ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவரும் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் பாஜக சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியமைக்க உள்ளது.
Chandrababu Naidu
அதே போல் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைப்பதில் அவரது கூட்டணி முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஒருவேளை சந்திரபாபு நாயுடு உடன் பாஜக கூட்டணி வைக்கவில்லை எனில் அது ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும்.
nithish kumar
நிதிஷ் குமாருடன் கூட்டணி:கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை கூட்டணி மாறிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தார். நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைக்க சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த பாஜக, அவருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது.
பீகாரில், சீட் பகிர்வு ஃபார்முலாவின், பாஜக 17 இடங்களிலும், ஜேடியூ 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம்) மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
நிதிஷ்குமாரின் ஜேடியு 12 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பாஜகவுக்கு ஆட்சி அமைக்க உதவி உள்ளது. ஒருவேளை கிங் மேக்கர்களாக கருதப்படும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருடன் பாஜக கூட்டணி அமைக்கவில்லை எனில் அது பாஜக மத்தியில் ஆட்சியமைப்பதற்கே சிக்கலை ஏற்படுத்தி இருக்கும்.