உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு ஏன் இன்னும் நடத்தாமல் உள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்த பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மீண்டும் அதே விளக்கத்தை அளித்திருந்தது. 

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடத்துவது தொடர்பான இறுதிப்பணிகளை எப்போது செய்வீர்கள், எப்போது தேர்தலை நடத்துவீர்கள் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.