திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதால், இது தீவிரவாத சதியாக இருக்கலாம் என என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை (அருகே காரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் கடுமையாக காயமடைந்தனர். அந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள் தீ பரவியதால், பல வாகனங்கள் தீக்கிரையாகின.

பாதுகாப்பு உயர் எச்சரிக்கை

இந்த வெடிவிபத்துக்குப் பின், டெல்லி–NCR, உத்தரபிரதேசம், மும்பை, ஜெய்ப்பூர், மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி – அமித் ஷா அவசர ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் நிலைமையை ஆய்வு செய்தார். அமித்ஷா மேலும் டெல்லி காவல் ஆணையர் மற்றும் நுண்ணறிவு துறை தலைவர் தபன் தேகா அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தார்.

தீயணைப்பு வீரர்களின் வேகமான நடவடிக்கை

இதுபற்றி தீயணைப்பு துணை அலுவலர் ஏ.கே. மாலிக் தெரிவித்ததாவது, “வெடிவிபத்து நடந்தவுடன் உடனடியாக ஏழு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.மாலை 7.29 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,”என்றார்.

வெடிவிபத்துக்குப் பின், அந்த சுற்றுப்பகுதியில் பெரும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படை அணிவகுப்பு உருவாகி, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பலத்தை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டு மீட்பு

இந்த நிலையில் சம்பவ இடத்தில் ஒரு பயன்படுத்தப்படாத துப்பாக்கி குண்டு (லைவ் புல்லட்) தரையில் கிடந்தது. இது தற்போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெடிவிபத்துக்குப் பின்னால் தீவிரவாத பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது. இதையடுத்து தேசிய விசாரணை முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.