நாட்டின் சுதந்திரதினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயம், பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்டவை குறித்து மக்கள் ஆலோசனைகள் அனுப்பி உள்ளனர்.

சுதந்திரதினத்தன்று தான் எதைப்பற்றி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று ஆலோசனைகளை மக்கள் அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரமர் மோடிக்கு ஏராளமான ஆலோசனைகள் மக்கள் அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஜூலை 30-ந்தேதி நடந் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசுகையில், “ செங்கோட்டையில் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி நான் நாட்டு மக்களுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நான் உண்மையில் ஒரு கருவிதான். ஒரு தனிநபர் இந்த நாட்டுக்கு  உரையாக இருக்ககூடாது, 125 கோடி மக்களின் குரலாக செங்கோட்டையில் ஒலிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பின் லட்சக்கணக்காண மக்கள் தங்களின் கருத்துக்களையும், சுதந்திரத்தினத்தன்று அவர் எதைப்பற்றி எல்லாம் பேசலாம் என்பது குறித்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். மேலும், ‘நரேந்திர மோடி ஆப்’,’மைகவ்’ ஆகிய ஆப்ஸ் வழியாகவும் ஆலோசனைகளை மக்கள் அனுப்பி வருகின்றனர்.

மைகவர்மென்ட் போர்ட்டலில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஆலோசனைகளும், 6 ஆயிரம் பேரும் டுவிட்டுக்கு பதில் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் கல்வி, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் மயம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் கல்வி ஆகியவை குறித்து அதிகமான ஆலோசகனைகள் வந்துள்ளன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.