வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் என்று பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பது தேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் அரசியல்வாதிகள் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அளிக்க வேண்டும். 

மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் தலைவர்களை பொதுமக்களுக்கு பிடிக்கும். ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதே பொதுமக்களிடம், அரசியல் தலைவர்கள் அடி வாங்குவார்கள். 

தேர்தல் வெற்றிக்கு தாங்கள் தான் பெருமை தேடிக்கொள்ளும் தலைவர்கள் தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமிர் ஷா ஆகியோரையே மறைமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம், புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என நிதிக் கட்கரி கூறினார். 3 மாநில தேர்தல் தோல்வியைத்தான் அவர் சுட்டிக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.