மத்திய பட்ஜெட் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்றளித்த பேட்டி:-
ரயில்வே அமைச்சரிடம் பாரம்பரியமாக இருந்து வந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் ஒவ்வொரு முறையும் தவறான நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரும் பிரதமர் நரேந்திர மோடியும் ‘இரட்டை சகோதரர்கள்’.

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த பாரம்பரியத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்து விட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான இ. அகமது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அத்தகைய சூழலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இது உண்மையிலேயே அறிவுக்கு உகந்த செயலா என்று தெரியவில்லை. இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
