ரெயில் விபத்தில் சிக்கி இரு கால்களும் சேதம் அடைந்த ஒருவரை காப்பாற்றுவதற்காக, பெண் ஊழியர் ஒருவர் தான் அணிந்திருந்த சேலையை ஸ்டிரெச்சராக பயன்படுத்தி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். தானே மாநகர மேயர் சஞ்சய் மோரே அவருக்கு பாராட்டு தெரிவித்து கவுரவித்தார்.

அது குறித்த விவரம் வருமாறு-

இரு கால்களும்...

மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே வாஷிண்ட் ரெயில் நிலையத்தில் தொழிலாளியாக (கேங்மென்) வேலை செய்து வந்தவர், விஷ்ணு கிராஜி அந்தாலே.

ரெயில் நிலையம் அருகே மற்ற ஊழியர்களுடன் அவர் வேலை செய்து கொண்டு இருந்தபோது வேகமாக வந்த ஒரு ரெயில் மோதி அவருடைய இரு கால்களும் சேதம் அடைந்தன.

அணிந்திருந்த சேலையை..

தண்டவாளங்களுக்கு நடுவே அவர் வலியால் அலறித் துடித்தபடி கிடந்தார். அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அப்போது மும்பை கல்யாண் ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் மனிஷா ஷிண்டே என்ற ஊழியர் அந்த வழியாக வந்தார்.

வலியால் கதறிய அந்தாலேயை பார்த்த அவர், சற்றும் தாமதிக்காமல், தான் அணிந்திருந்த சேலையையே ‘ஸ்டிரெச்சராக’ மாற்றி அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இன்றி, அந்தாலே பரிதாபமாக இறந்தார்.

பாராட்டு

மனிஷா ஷிண்டேயின் ‘காலம் அறிந்து’ செய்த இந்த உதவி பற்றி அறிந்த தானே மாநகர மேயர், அவரை அழைத்து சிறிய விழா நிகழ்ச்சியின் மூலம் ஷிண்டேவுக்கு சால்வை அணிவித்து பாராட்டு பத்திரம் வாசித்து அளித்தார்.

மனிஷா ஷிண்டே போல் சமூகத்தில் மற்றவர்களும் இதே போன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று, அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.