திருப்பதி லட்டு விலை உயர்த்தப்பட இருப்பதாக வந்த தகவலை தேவஸ்தான குழு தலைவர் மறுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சலுகை விலையில் 2 லட்டுகள் 20 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு லட்டு செய்வதற்கே 40 ரூபாய் செலவாகுவதால் தேவஸ்தானத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில் லட்டின் விலையை அதிரடியாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வந்தது.

அதன்படி அனைத்து தரிசன பிரிவுகளுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு லட்டும் 50 ரூபாய்க்கு விற்கப்பட தேவஸ்தானம் முடிவெடுத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விலை உயர்த்தப்படுவதாக வெளியான தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருப்பதி லட்டுகள் அதே மானிய விலையில் தான் வழங்கப்படும் என்றும், விலை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.