கர்நாடகாவில் 21 காங்கிரஸ் அமைச்சர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 13 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, கடந்த மாதம் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ்க்கு சிறுதொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை திடீரென  ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மேலும் மாநிலத்தின் நன்மைக்காக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், கர்நாடக அரசில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 21 அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தகவல் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பரமேஸ்வரா வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டார். 

அதேபோல், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். இதனையடுத்து, கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.