கேரளாவில் ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் 40 பயணிகளையும் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (55). கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட நெடுமங்காடு டெப்போவில் ஓட்டுநராக  பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை கல்லராவில் இருந்து நெடுமங்காட்டுக்கு பேருந்தை ஓட்டி சென்றார். பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அதே பேருந்தில் ஒரு தனியார்  நிறுவனத்தில் பணிபுரியும் அவரது மகளும் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் மூழிகொல்லை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது ஜெயராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால், அவர் வலியையும் பொருட்படுத்தாமல் அதை சமாளித்துக்கொண்டு பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். இதனையடுத்து, 40 பயணிகளை காப்பாற்றிய நிலையில் அடுத்த நொடியே அவர் ஸ்டியரிங்கில் சரிந்தபடியே உயிரிழந்தார். 

அப்படி இருந்த போதிலும் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இறக்கும் நேரத்திலும் தங்களை காப்பாற்றிய ஓட்டுநரை பார்த்து பயணிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.