Asianet News TamilAsianet News Tamil

இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்: மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பும் கொமட்டி ரெட்டி!

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, விலை உயர்ந்த இடைத் தேர்தலுக்கு வழிவகுத்த கொமட்டி ரெட்டி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார்

Komatireddy Raj Gopal Reddy returned to congress who made costliest election smp
Author
First Published Oct 25, 2023, 2:24 PM IST

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தெலங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. கொமட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி, பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும்  காங்கிரஸ் கட்சிக்கு திரும்பவுள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசை வீழ்த்துவதே தனது நோக்கம் என்றும், மக்கள் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தபோது தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார் கொமட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி. அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அவரது முனுகோடு சட்டமன்றத் தொகுதி காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பாஜக சார்பில் போட்டியிட்ட கொமட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி, பாரத் ராஷ்டிர சமிதி வேட்பாளர் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டியிடம் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கடந்த நவம்பரில் நடந்த முனுகோடு இடைத்தேர்தல், நாட்டின் மிகவும் விலை உயர்ந்த தேர்தல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை அங்கு கொட்டின. தேர்தலையொட்டி, 8 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 5,000 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாகவும் முனுகோடு இடைத்தேர்தல் இருந்தது. வாக்குப்பதிவு செயல்முறையை 48 சிசிடிவி கேமராக்கள் கண்காணித்தன. அது, 298 காவல் நிலையங்களில் ஒளிபரப்பப்பட்டது.

பாஜகவில் இருந்து விலகும் முடிவை அறிவித்த கொமட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி, “கேசிஆர் ஆட்சியை வீழ்த்துவதே எனது நோக்கம். மக்களின் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது, எனவே மக்களின் விருப்பத்திற்கு நான் கட்டுப்படுகிறேன்.” என்று கூறினார். அவரது சகோதரர் கொமட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, புவனகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி!

தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி அரசை வீழ்த்த காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் அம்மாநில தேர்தல் கூட்டங்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டு வருகின்றனர். தெலங்கானாவின் பிரச்சினைகளை புறக்கணித்து தனது குடும்ப உறுப்பினர்களை கேசிஆர் ஊக்குவிப்பதாக அவர்கள் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன்கள் மற்றும் இந்திரா காந்தியின் பேரக்குழந்தைகள் குடும்ப அரசியல் பற்றி பேசுவதாக, கேசிஆரின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ் மற்றும் அவரது மகளும் எம்.எல்.சி.யுமான கவிதா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios