புலிகளை காக்க பைக்கில் பயணம்... கொல்கத்தா தம்பதியின் புது ஐடியா...!

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்து வருகிறது. அதனை பேணிக்காக அரசு மட்டுமின்றி பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நமது தேசிய விலங்கான புலியை காக்க வலியுறுத்தி கொல்கத்தாவைச் சேர்ந்த தம்பதி இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுபயணம் செய்து வருகின்றனர். 

கொல்கத்தாவைச் சேர்ந்த ரதிந்த்ரா தாஸ், அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி கொல்கத்தாவின் புலிகள் காப்பகத்தில் இருந்து தங்களது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினர். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களையும், 5 யூனியன் பிரதேசங்களையும் பைக்கில் சுற்றி வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் இந்த தம்பதி களத்தில் இறங்கியது. 

மாநில வாரியாக புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள புலிகள் சரணாலயத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பைக்கில் சுற்றும் சாகச பயணத்திற்கு இந்த தம்பதி “ஜார்னி ஃபார் டைகர்” எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது ஒடிசா வந்திருக்கும் இந்த தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.