சமாஜ்வாடிக் கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு? நாளை மறுநாள் முடிவு

 

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது குறித்து முலாயம் சிங் மற்றும்  அகிலேஷ் யாதவ் தரப்பினருடன் வரும் 13-ம் தேதி விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும், சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஒரு பிரிவினரும், அவரது மகனும் முதலமைச்சருமான  அகிலேஷ் யாதவ் தலைமையில் மற்றொரு பிரிவினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதால், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தைப் பெறுவதில் இரு தரப்பினரும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தை சில தினங்களுக்கு முன் தனித்தனியே சந்தித்த அவர்கள், கட்சியில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, அதற்கான ஆவணங்களை அளித்தனர். 

இந்த ஆவணங்களை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், முலாயம் சிங் யாதவ் தரப்பினரையும், அகிலேஷ் யாதவ் தரப்பினரையும், வரும் 13-ம் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.