சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக  இருந்தது. 

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.  பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக காங்கிரஸ், பாஜக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து  மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் நேற்று  அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதலமைச்சர்  பினராயி விஜயனும் உறுதி செய்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சென்னையிலும் அது எதிரொலித்தது.

நேற்று நள்ளிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. சாமியே சரணம் அய்யப்பா என கோஷம் எழுப்பியபடி வந்த இந்து அமைப்பினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

சுமார் 15 க்கும் மேற்பட்டோர் அங்கு வந்ததாகவும், நள்ளிரவு நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.