மண்ணுலகை விட்டு விண்ணுலகு எய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை  எனப்படுகிறது. ஆத்மாக்கள் மோட்சத்தை அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் நமது வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு வாழ்வதற்கு ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும்.

சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும். தாத்தா, பாட்டி மாமனார் மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.

இந்த நாளையொட்டி தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுறை, திருச்சி கரு மண்டபம், மற்றும் முக்கிய ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பண்ம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதே போன்று கேரளாவிலும் பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆனால் கேரளா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருவதால், ஆற்றங்கரைகளுக்கே போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,

நதிகள் முழுவதும் பொங்கி வழிவதால் பொது மக்கள் ஆற்றங்கடிரகளில் தர்ப்பணம் செய்ய முடியவில்லை. இதையடுத்து இன்று கேரள மக்கள் தங்களது முன்னோர்களுக்கு சாலைகளில் பந்தல் அமைத்து தர்ப்பணம் செய்தனர்.

கேரளாவில் தர்ப்பணம் செய்வதற்கு பெயர் பெற்ற ஆலுவா சிவன் கோவில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கும் தர்ப்பணம்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.