வேகமெடுக்கும் நிபா பரவல்.. கேரளாவில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்..

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா தொற்று உறுதியாகி உள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Kerala : One more person tests positive for nipah virus total cases rise to 6 with 2 deaths Rya

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாநில அரசு நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பல கிராமங்கள் கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள நிபா நோயாளிகள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிபாவால் உயிரிழந்த இருவரின் வழித்தடங்கள் வெளியிடப்பட்டதால் மக்கள் அந்த வழிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் நிபா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதியானது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது. 

இந்த சூழலில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 39 வயது நபர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தின் மொத்த நிபா பாதிப்பு எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. நிபா பாதிப்பு உறுதியான நபர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் 700 பேர் தொடர்பில் இருந்துள்ளதால் நோயாளிகளின் தொடர்பு பட்டியல் கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த 700 பேரில் 77 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளனர் என்று கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். 13 பேர் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர், அவர்களுக்கு தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆய்வகங்களில் நிபா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பே, நோய்த்தொற்றை "முக்கியமாக கண்டறிவதை" அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மாநில சுகாதாரத்துறை மருத்துவ அறிகுறிகளை கண்காணித்து வருகிறது என்றும், அறிகுறிகளைக் கொண்டவர்களை தனிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார்.

 இந்த முறை கேரளாவில் காணப்படும் நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் ஆனால் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. நிபா என்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவுகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பின்னர் அது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி ஆகிய்வை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம். நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது குணப்படுத்த தடுப்பூசிகள் இல்லை, 

கேரளாவில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது நிபா பரவல் இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் முதன்முதலில் நிபா பரவியபோது பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் இறந்தனர். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டில், நிபா வைரஸ் காரணமாக மேலும் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios