கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீரென அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் அளித்தார்.  

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ தாமஸ் திருவல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் மேத்யூ தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் தெரிவித்தார். 

மேத்யூ தாமஸ் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கிருஷ்ணன்குட்டி புதிய நீர்வளத்துறை அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.