கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், மாந்திரீகம் செய்ய மறுத்த மனைவி முகத்தில் கணவர் சூடான மீன் குழம்பை ஊற்றியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மாந்திரீகம் (Black Magic) செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மனைவி முகத்தில் சூடான மீன் குழம்பை ஊற்றிய கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான கணவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபரீதமான மாந்தரீகம்

சடையமங்கலம் அருகே உள்ள வைக்கல் பகுதியைச் சேர்ந்த ரெஜிலா கஃபூர் (36). இவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் சஜீர் தலைமறைவாக உள்ளார்.

புதன்கிழமை காலை 10 மணியளவில், வாடகை வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளது. மாந்திரீகம் செய்யும் நபரிடம் இருந்து பெற்ற விபூதியை முகத்தில் பூசவும், தாயத்தை கட்டவும் தனது தலைமுடியை அவிழ்த்து முன் உட்காரும்படி சஜீர், ரெஜிலாவைக் கட்டாயப்படுத்தியதாக FIR கூறுகிறது.

ரெஜிலா மறுத்தபோது, சஜீர் கோபமடைந்து, சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த சூடான மீன் குழம்பை எடுத்து அவரது முகத்தில் ஊற்றியுள்ளார்.

உதவிக்கு வந்த அக்கம் பக்கத்தினர்

ரெஜிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தனது கணவர் அஞ்சலில் உள்ள ஒரு உஸ்தாத் (மாந்திரீகம் செய்பவர்) என்பவரை அடிக்கடி சந்திப்பதாகவும், அவர் சொன்னதாலேயே தனக்கு விபூதி பூசவும் தாயத்துக் கட்டவும் முயன்றதாகவும் ரெஜினா தெரிவித்தார்.

ரெஜிலாவை அவரது கணவர் ஏற்கனவே பலமுறை தாக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் பேய் பிடித்திருப்பதாக சஜீர் நம்பியுள்ளார்.

கடந்த முறையும் கணவரின் தாக்குதல் குறித்து ரெஜிலா போலீஸில் புகார் அளித்ததாகவும், அப்போது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பின்னர் சஜீர் மாந்திரீகம் செய்பவர்களை அணுகத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் கூறினர். சஜீர் அடிக்கடி தங்களது மகனையும் தாக்கியதாக ரெஜிலா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சஜீர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 118(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சஜீரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.