அரசு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!!
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி அவசரச் சட்டம் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வேந்தர் பதவிக்கு கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவரை நியமிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆரிப் முகமது கான், 11 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் சமீபத்தில் அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக துணை வேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து, துணை வேந்தர்கள் நீதிமன்றத்தை அணுகி நோட்டீஸ் சட்டவிரோதமானது என்றும் செல்லாது என்றும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அரசியல் தலையீடா; நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார்; கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால்!!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணை வேந்தர்கள் பணியில் தொடரலாம் என்று தெரிவித்து இருந்தது. இதற்கிடையே செவ்வாய் கிழமை வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வேந்தராக இருக்கும் ஆளுநர் துணை வேந்தர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. துணை வேந்தர்களுக்கு ஏற்கனவே ஷோ காஸ் நோட்டீசை ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அடுத்தது இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் வரை எந்த நடவடிக்கையும் துணை வேந்தர்கள் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்றம் அக்டோபர் 21ஆம் தேதியன்று, ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் நியமனத்தை ரத்து செய்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையின்படி, மாநிலத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி, பொறியியல் அறிவியல் துறையில் இருக்கும் பொருத்தமான மூன்று பேரை வேந்தருக்கு பரிந்துரைத்து இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஒரே ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைத்து உள்ளனர். இதனால், துணை வேந்தரை நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது.
அதன் அடிப்படையில், ஆரிப் முகமது கான், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட துணை வேந்தர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர் உறுப்பினராக இருக்கும் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.