இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. பலி எண்ணிக்கை 700ஐ நெருங்கிவிட்டது. கொரோனாவை தடுப்பதற்காக, ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிதி தேவைப்படுகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களீடம் நிதியுதவி கோரின. இதையடுத்து அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்துவருகின்றனர். 

இந்நிலையில், கேரள அரசு, அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கேரள நிதித்துறை அளித்த பரிந்துரையில், அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை 5 தவணைகளாக பிடித்தம் செய்துவிட்டு, நிதி நிலைமை சீரடைந்ததும் அந்த தொகையை திரும்ப அரசு ஊழியர்களுக்கு கொடுத்துவிடலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனவே அதன்படி, அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை 5 தவணைகளாக பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரைப்படுத்தையடுத்து, உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தடைவிதித்தது. அதனால் தான் இம்முறை, ஊதியத்தை கஷ்ட காலமான தற்போது பிடித்தம் செய்துவிட்டு நிதி நிலைமை சீரடைந்தவுடன் திருப்பி செலுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியான முதல் மாநிலம் கேரளா தான். ஆனால் கடந்த மாத இறுதியில் உச்சத்தில் இருந்தது பாதிப்பு. ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல், கடந்த 20 நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்திருப்பதுடன், 300க்கும் அதிகமானோர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த கேரளா, அதிலிருந்து மீண்டதிலும் முதல் மாநிலமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.