கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் அதி தீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17, 343 வீடுகள் சேதமடைந்துள்ளன என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு தீவிரமடைந்ததால் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இயற்கையின் ருத்ரதாண்டவத்தால் விடாது மழை பெய்தது. தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

700-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து, மாநில முதல்வர்கள் மூலம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. கேரளாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் அம்மாநில முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் அதி தீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.