கொரோனாவை தடுக்க ஊரடங்கு அவசியம் என்பதால், வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

கொரோனா சமூக தொற்றாக பரவாமல் தடுப்பதற்காக தேசிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாமல், மாநில அரசுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா முதலில் உறுதியான கேரளாவில் கஜானாவே காலியாகும் நிலையில் உள்ளது. கேரளாவில் தான் முதலில் கொரோனா உறுதியானது. அதன்பின்னர் மளமளவென கேரளாவில் உயர்ந்த கொரோனா பாதிப்பு, ஏப்ரல் மாத தொடக்கம் முதல் கட்டுக்குள் வந்தது. கிட்டத்தட்ட மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் மார்ச் மாத இறுதியில், பாதிப்பு எண்ணிக்கையில் ஒரே அளவில் இருந்தன. ஆனால் இப்போது மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ நெருங்கிவிட்டது. ஆனால் கேரளாவில் 450 ஆக உள்ளது. 

கேரளாவில் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளாலும் தரமான சிகிச்சையாலும் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் 300க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், வெறும் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு, பெருந்தொற்றிலிருந்து மீள்வதில் முன்னோடியாக திகழ்ந்தாலும், அம்மாநில அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. மாநில அரசின் கஜானாவே காலியாகவுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள தாமஸ் ஐசக், மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஊரடங்கின் விளைவாக ஏப்ரல் மாதம் ரூ.250 கோடி மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.2000 கோடியை சேர்த்தாலும், அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தொகை கிடைக்காது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.2500 கோடி தேவை. எனவே அரசின் கருவூலமே காலியாகும் நிலை உள்ளது. 

அதனால்தான் அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்ற யோசனையை அளித்தோம். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த யோசனையை கைவிட்டு, 5 தவணைகளாக அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை பிடிப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.