கொரோனாவின் கோரத்தாண்டவம் மத்தியில் கேரள முதலவர் பினராயி விஜயனின் மகளின் திருமணம் அவரது வீட்டில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில்,  நாடு முழுவதும் ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும் இந்திய இளைஞர் அணி கூட்டமைப்பு தலைவர் முகமது ரியாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் முதல்வர் குடும்பம் உள்பட மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. முகமது ரியாஸ் மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் அவரைச் சுற்றி இருந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தை முதல்வர் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக முதல்வரின் வீட்டிலேயே நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த திருமண நிகழ்ச்சியில் கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜூஷ் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதரின் மகனாவார். இருவருக்குமே இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.