கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் 31ந்தேதி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல முக்கிய வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டு ஆலோசனையும், விவாதமும் நடத்துகின்றனர்.

 ‘நாம் முன்னூட்டு’ (நாம் முன்னேறுவோம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், மக்களின் குறைகளை முதல்வர் பினராயி விஜயன் கேட்க உள்ளார். 

வாரம் ஒருமுறை, 30 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வரும் 31-ந்தேதி முதல் பகுதி பல்வேறு சேனல்களில் வெளியாகிறது. மக்களின் எண்ணங்களையும், தேவைகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி முக்கியமானதாக இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆரண்முலா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வும் முன்னாள் பத்திரிகையாளருமான வீணா ஜார்ஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தூர்தர்ஷன் மலையாளம் சேனல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கும், மறு ஒளிபரப்பாக திங்கள்கிழமை இரவு 10மணிக்கும் ஒளிபரப்பு செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சமூக, பொருளாதார, கலாச்சார துறைகளில் சிறந்த வல்லுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக இடம் பெற்று, அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, விவாதிப்பார்கள். ஒவ்வொரு வாரமும், அரசின் ஒவ்வொரு திட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அரசு சாதித்தது என்ன?, குறைகள், நிறைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

மேலும், தேர்வு செய்யப்பட்ட பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கிறார். அப்போது, அரசுக்கு மக்கள் ஏதேனும் ஆலோசனைகள், திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முதல்வரிடம் தெரிவிக்க முடியும்.

இதே போன்ற நிகழ்ச்சி இதற்கு முன் ஏசியாநெட் சேனலில் கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகியது. அதில்  முன்னாள் முதல்வர் இ.கே.நாயனார் பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.