மது குடிப்பவர்களின் வயதை 21லிருந்து 23 ஆக உயர்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அப்காரி சட்டத்தை தருத்தில் செய்து, இதை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து, இந்த உத்தரவை அவசரச் சட்டமாக கொண்டுவரவும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தேர்தலின் போது, மக்களுக்கு அளித்தவாக்குறுதியில், மதுக்குடிப்பவர்களின் வயதை உயர்த்துவதாகத்  உறுதிஅளித்து இருந்தது. அதை இப்போது செய்ய உள்ளது. அதற்கு ஏற்றார்போல், இந்த ஆண்டு தொடக்கத்தில் கலால் கொள்கையையும் அறிவித்தது.

மேலும், கடந்த ஆண்டு மே  மாதம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, பொறுப்பு ஏற்றதும், முந்தைய காங்கிரஸ் அரசின் மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவை தளர்த்தியது. மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு இது சரியான முறையல்ல, மது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மதுக்கடைகளை மூடுவது தீர்வாகாது என தொடர்ந்து முதல்வர் பினராயி அரசு கூறி வருகிறது.

மதுக்கடைகள் மூடுப்பட்டபின், மாநிலத்தில் விபத்துக்கள் அதிகரித்துவிட்டதாகவும், போதைப்பொருள் மற்றும் மனநிலையை பாதிக்கும் பொருட்கள் சட்டத்தின்கீழ் அதிகமான வழக்குகள் பதிவானதாக மாநில அரசு தெரிவித்தது. இதையடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைபொருள் தடுப்பு, மதுமறுவாழ்வு மையம் உண்டாக்கவும் புதிய கலால்வரிக் கொள்கை அறிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அறிவித்த புதிய கலால்வரிக் கொள்கை சிறப்பாக அதனுடைய இலக்குகளை நோக்கி சென்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசின் புள்ளிவிவரங்கள் படி, மாநிலத்தில் மதுக்குடிப்பவர்களில் 6 சதவீதம் பேர் மதுஅடிமைகளாகவும், 54 சதவீதம் பேர் கூடுதலாக மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.