கேரளாவில் பா.ஜ.க. விடுத்த அழைப்பின் பேரில் இன்று நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னூர் மாவட்டத்தில் பாஜக தொண்டர் ரெமித் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முதல்வர் பிரனாய் விஜயனின் சொந்த ஊரில் நடைபெற்ற இக்கொலையில் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி கேரளாவில் பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலைநகர் திருவனந்தபுரத்தில் பஸ்கள் இயங்கவில்லை. 
இதனால் ரயிலில் வந்து இறங்கிய பயணிகள் சொந்த இடங்களுக்கு செல்ல சிரமப்பட்டனர். போலீசார் அவர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றி இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்துகள் எல்லை வரை இயக்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கோவையில் இருந்து கேரளாவுக்கு வழக்கம் போல செல்லும் பஸ்களும் இயங்கவில்லை.

கேரளாவில் கடை அடைப்பு போராட்டம் என்பதை அறியாமல் உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.