சபரிமலை ஐயப்பன் கோயிலில், இரு பெண்கள் சாமி  தரிசணம் செய்த விவகாரம் பூதாகரமாகிவருகிறது. இந்த விஷயத்தில் பினராயி அரசைக் கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற  உத்தரவிற்கு பின்னர் கோயிலில் பெண்களை அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றதால் பெண்கள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.  பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் பினராயி அரசு உறுதியாக உள்ளது. இதனால், சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயது பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த 44 வயது கனகதுர்கா ஆகியோர் நேற்று அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்தார். இந்த விஷயம் தெரிந்த பிறகு கேரளாவில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. மாநிலத்தின் பல நகரங்களிலும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரமாக்கி வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக கேரளா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தப் போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் ஆதரவு வழங்கின. இதன்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தால், இருமுடி கட்டி சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரள எல்லையில் தமிழகப் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்படுகின்றன.