மாணவர்களிடையே கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி வழங்காவிட்டால் அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தும் என டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

தனியார் பள்ளிகளின் செயல்பாட்டில் மாநில அரசு தலையிட விரும்பவில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது அரசின் கடமையாகும்.

6-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக கூறி கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளின் விபரங்களை நீதிபதி அனில்தேவ் சிங் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. அந்த பள்ளிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி செலுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பள்ளிகள் நீதிபதி அனில்தேவ் சிங் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கடைசி நடவடிக்கையாக விதிமுறைகளை கடைபிடிக்காத அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தும்.

இவ்வாறு முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின்போது டெல்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியாவும் கலந்துகொண்டு பேசினார். மாணவர்களிடையே வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி செலுத்தாத தனியார் பள்ளிகளுக்கு 2 வார கெடு விதித்து 4 நாட்களுக்கு முன்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.