தெலங்கானா மாநிலத்தில் உள்ள 55 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக 26 லட்சம் டன் உரங்கள் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அரசு நேரடியாக செலுத்தும், அதன் மூலம் விவசாயிகள் உரங்களை வாங்கிக்கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

கடன்தள்ளுபடி

கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் 4-வது பகுதியான ரூ. 4 ஆயிரம் கோடிக்கான அறிவிப்பை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட நிலையில், இப்போது இலவச  உரத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதி

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, விவசாயிகளின் பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடியை ஒவ்வொரு பகுதியாக தள்ளுபடி செய்து அரசு செலுத்தும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் வாக்குறுதி அளித்து இருந்தார். அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

இலவச உரத்துக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் கரீப் பருவம் தொடங்கும் முன், அதாவது மே மாத இறுதிக்குள், ரூ. 4 ஆயிரம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் இல்லாத விவசாயிகள்

ஐதராபாத்தில் உள்ள பிரகதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் முன் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில், “ 36 லட்சம் விவசாயிகளின் பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடியை 4 பிரிவுகளாக அரசு செலுத்திவிட்டது. இப்போது நீங்கள் கடன்சுமை இல்லாத விவசாயிகள். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

9 மணி நேரம் மின்சாரம்

விவசாயிகளுக்கு நான் ஏராளமான வசதிகளை செய்ய ஆசைப்படுகிறேன். விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள், உரங்கள், 9 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்க இருக்கிறேன். மானிய விலையில் சொட்டுநீர் பாசனத்தையும் வழங்க திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கைதரம் உயர்த்தப்படும். மேலும், 1 கோடி ஏக்கர் நிலத்துக்கு தேவையான நீர்பாசன வசதியும் தரப்படும்’’ என்று தெரிவித்தார். 

55 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியம் மூலம், 13 லட்சம் டன் யூரியா, 1.75 லட்சம் டன் பொட்டாஷ், 11 லட்சம் டன் டி.ஏ.பி.,என்.பி.கே. உரங்கள் கொள்முதல் செய்யப்படும்.