Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் பேராசையே பெரிய காரணம்…!

kavery dam-water
Author
First Published Jan 5, 2017, 9:14 AM IST


தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் கூட்டாக இணைந்து காவிரிப் பிரச்சனைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று கனடா நாட்டின் இயற்கை நீர் ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானியும், பேராசிரியருமான ராஜசேகர் மூர்த்தி தெரிவித்தார்.

தேசிய பொறியியல் கல்லூரி மையத்தின் சார்பில்  மைசூரில் நடைபெற்ற எல்லைகளுக்கு இடையிலான நீர்ப்பகிர்வு மற்றும் அதற்கான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பிலான பயிலரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:-

 தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தீராத பிரச்சனையாக காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் இருந்து வருகிறது. இப் பிரச்சனையால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு இரு மாநிலங்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண முற்பட வேண்டும்.

பெய்த மழையின் அளவு, பயிர்களுக்குத் தேவைப்படும் நீரின் அளவை கருத்தில் கொண்டு நீர்ப்பகிர்வை மேற்கொள்ள இரு மாநில அரசுகளும் தனி நடுவர் மன்றத்தை அமைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான நதிநீர்ப் பங்கீட்டு விவகாரங்கள் அரசியல், மாநில உணர்வு போன்றவற்றால் ஆட்கொண்டுள்ளன.

நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டிலும், பேராசைதான் இப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. கர்நாடகத்தில் கொள்கை முடிவுகளை எடுப்போருக்கு போதுமான அளவுக்கு தொலைநோக்குச் சிந்தனை இல்லை.

பெங்களூரு ஊரகம் மற்றும் கோலார் மாவட்டங்களுக்கு நெடுந்தொலைவில் உள்ள கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து எப்படி தண்ணீர் கொண்டுவர முடியும். நீர்ப் பிரச்சனைகளை தீர்க்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடலாம்.

வெளிநாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் எழும்போது விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு, அறிவியல் ரீதியான தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன. இது நீண்டகால தீர்வாக அமைந்துவிடுகிறது. நீர்ப் பிரச்னையில் பிற நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை நாமும் பின்பற்றலாம்.

கனடா மற்றும் அமெரிக்கா இடையே நீர்ப்பகிர்வுத் திட்டம் நூற்றாண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமலில் இருந்து வருகிறது. கழிவுநீரைச் சுத்திகரித்து, நிலத்தடிநீரை மேம்படுத்தி, குடிநீர், தொழிற்சாலை, விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராயலாம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios