காஷ்மீரில் ஜீரோ டிகிரியை எட்டிய வெப்பநிலை! 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உஷ்ண நிலை ஜீரோ டிகிரிக்‍கு சென்றதால், பல இடங்களில் தண்ணீர் உறைந்து போயுள்ளது. இதனால் பொதுமக்‍கள் பெரும் இன்னலுக்‍கு உள்ளாகினர்.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடும் குளிர் காரணமாக பொதுமக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ​நிலையில் ஸ்ரீநகரில் சீதோஷ்ண நிலை​ஜீரோ டிகிரிக்‍கு சென்றுள்ளதால் நீர்நிலைகள் உறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்‍கொள்ள பொதுமக்‍கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். கடும் குளிர் காரணமாக பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில் அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனம் கண்ணுக்‍கு புலப்படாதவாறு அடர்ந்த பனிமூட்டம் நீடித்து வருவதால், சாலை போக்‍குவரத்து கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

வாகனங்கள், முகப்பு விளக்‍கை எரியவிட்டபடியே மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்க முடியாமல் பல்வேறு பகுதிகளில் பொதுமக்‍கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

பனி மூட்டம் காரணமாக, ரயில் மற்றும் விமான சேவையும் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 24 ரயில்கள் தாமதமாக இயக்‍கப்படுவதோடு, சில ரயில்களின் நேரமும் மாற்றியமைக்‍கப்பட்டுள்ளது

இதனால், ரயில் நிலையத்திலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பயணிகள் காத்திருக்‍க வேண்டிய பரிதாப நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்தின் ஓடுபாதை தெரியாத அளவுக்‍கு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் விமான சேவையும் பாதிக்‍கப்பட்டுள்ளதோடு, டெல்லிக்‍கு வந்து செல்லும் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 8 உள்நாட்டு விமானங்களின் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.