kashmir
ஜம்ம காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வீடியோக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போலீசாருக்கு முதல் அமைச்சர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.
8 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி, கந்தர்பெல், புத்காம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. இங்கு கடந்த 9-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொகுதி முழுவதும் வன்முறை ஏற்பட்டதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதற்றம் காரணமாக மொத்தம் 7.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்நிலையில், தேர்தல் நடைபெற்றபோது துணை ராணுவ வீரர் ஒருவரை வன்முறையாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை தாக்கினர்.

3 வீடியோக்கள்
இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மற்றொரு வீடியோ ஒன்றில் வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை மிக அருகில் இருந்து பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 3-வது வெளியான வீடியோவில், காஷ்மீர் இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பின் முகப்பில் பாதுகாப்பு படையினர் கட்டி வைத்துள்ளனர். வன்முறையாளர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, அந்த இளைஞரை வீரர்கள் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர்.
மற்றொரு பிரச்னை
இந்த வீடியோ புத்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 வீடியோக்களும், மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே பாதுகாப்பு படையினருக்கும், கற்களை வீசி வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், புதிதாக பரவி வரும் வீடியோக்கள் முதல் அமைச்சருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. ஜீப்பில் இளைஞர் கட்டப்பட்டு அவர் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் முதல் அமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
‘அறிக்கை வேண்டும்’
இந்த நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் 3 வீடியோக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு முதல் அமைச்சர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநில அரசின் உயர் அதிகாரிகள் கூறுகையில், பதற்றத்தை ஏற்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து முதல் அமைச்சர் கவலை தெரிவித்தார். இதுதொடர்பாக விரிவான அறிக்கையை அளித்து, நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

கமல் கண்டனம்
துணை ராணுவ வீரர் காஷ்மீர் இளைஞர்களால் தாக்கப்பட்டது குறித்து நடிகர் கமல் ஹாசன் கூறுகையில், ராணுவ வீரரை தாக்கியவர்கள் அவமானப்பட வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் ராணுவ வீரர் பொறுமை காத்து, பதிலடியில் ஈடுபடாமல் பாதுகாப்பு படையின் ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருந்தார். அகிம்சைதான் வீரத்தின் உச்சம் என்று கூறியுள்ளார்.
