Kartosat 2 rokert ready ..count town started
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 30 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
இறுதி கட்ட பணியான 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது . நாளை காலை 9.29 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
