கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் சபாநாயகர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களில் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தை, சில நாட்களுக்கு முன்னர் மாநில சட்டசபை சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரை சந்தித்து கொடுத்தனர். அதை அவர் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், வரும் செவ்வாய்கிழமை வரை எம்.எல்.ஏக்கள் கொடுத்த ராஜினாமா குறித்து எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. அதில் ஒருவர் தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். நிலைமை இப்படி இருக்க, கூட்டணி அரசுக்குச் சாதகமாக செயல்படுவதற்காகவே சபாநாயகர் ரமேஷ் குமார், ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் அவரோ, “நான் வேண்டுமென்றே ராஜினாமா கடிதங்களை பரிசீலக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் என்னை முதன்முறையாக ஜூலை 6 ஆம் தேதி, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி சந்திக்க வந்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை.

இப்போது எனக்கு 70 வயதாகிறது. இனியும் அரசியல் காய் நகர்த்தல்களை செய்து என்னால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது. இந்த விவகாரம் என்னை ஒரு தவறான மனிதன் போல சித்தரித்துள்ளது. தயவு செய்து என்னை நிம்மதியாக இறக்கவிடுங்கள். ராஜினாமா கடிதங்களை என்னிடம் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சமர்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நான் பலகட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் சட்ட சாசனத்தின்படி நான் நடந்து கொள்ள வேண்டும்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் என்னிடம் இப்போது தான் முறையிட்டுள்ளனர். முதலில் அவர்கள் மும்பை சென்றனர். தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், மாநிலத்தின் சட்டசபை சபாநாயகரை அவர்கள் பார்க்கவேயில்லை. இது சரியான நடைமுறையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.