கர்நாடகாவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் நாளை காலை 11 மணியளவில் தன்னை நேரில் சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 15 பேர், முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி தெரிவித்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இது கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளம்பியது. அவர்கள் தவிர அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

 

ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கு விளக்கம் கொடுத்த சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்கவில்லை. என்னை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தால் நான் பரிசீலிப்பேன் என தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவர்கள் சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது சபாநாயகருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.  

அதாவது சட்டப்பேரவை விவகாரத்தில் தலையிடக்கூடாது. அப்படி இருக்கையில் எம்.எல்.ஏ.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்பதை மட்டும் உச்சநீதிமன்றம் ஏன் கூறியது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகையால், உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ்-மஜத போன்ற கட்சி கொறடாக்களின் உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தும். உச்சநீதிமன்ற ஆணையை ஆய்வு செய்து வந்ததால் உத்தரவு பிறப்பிக்க தாமதமானதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடாக்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.