தான் செய்துவந்த பாலியல் தொழிலைக் கைவிட்டுவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்ட வந்த திருநங்கை ஒருவருக்கு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணி வழங்கி கவுரவம் செய்திருக்கிறது கர்நாடக அரசு. இதன் மூலம் தலைமைச் செயலகத்தில் பணிக்கு சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

கர்நாடகா மைசூரைச் சேர்ந்தவர் பாரிஷே கௌடா(28). திருநங்கையான இவர் தனது 13 வயதில் தனக்குள் நிகழ்ந்த உடல் ரீதியான மன ரீதியான மாற்றங்களால் தன்னைப் பெண்ணாக உணர்ந்தார். 17வயதுவரை குடும்பத்துடன் இருந்த பாரிஷே கௌடா, அதற்கு பின்னர் கொஞ்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னுடைய உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் இருந்த இவருக்கு, வீட்டை விட்டு வெளியேறியது மிகுந்த  மன நிம்மதியையும் ஆறுதலையும் கொடுத்தது.

நீண்ட தனது பயணத்துக்குப்பின் பெங்களூரு வந்த பாரிஷே கௌடாவிற்கு, கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. வாழ்க்கை நடத்துவற்கு, ஏதாவது வேலை செய்யவேண்டுமே என்ற கண்ணோட்டத்தில் பல இடங்களில் வேலை தேடிச் சென்றார். இவர் திருநங்கை என்பதை காரணம் காட்டி பலரும் வேலை தர மறுத்துவிட்டனர். செய்வதறியாது தவித்த பாரிஷே கௌடா வேறுவழியின்றி மற்ற திருநங்கைகள் போலவே  பாலியல் தொழிலில் ஈடுபட்டார். 

அத்தொழிலில் நிறைய பணம் சம்பாதித்தாலும் அதில்   ஏற்பட்ட தொடர் மன உளைச்சல் காரணமாக பாலியல் தொழிலை கைவிட்டார். இதையடுத்து, பாலின சிறுபான்மையினருக்காக சேவையாற்றி வரும் ’பயணா’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். 8 ஆண்டுகளுக்கு மேலாக இதே பணியைச் செய்து வந்தார் பாரிஷே கௌடா. இதனால் இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்நிலையில், இவரது சேவையை அறிந்த கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஜெயமாலா, பாரிஷேவை நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன், கர்நாடக  தலைமைச் செயலாகமான ’விதான சௌதா’வில்  உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக  பணியாற்ற வாய்ப்பும் வழங்கியுள்ளார். இதனால், கர்நாடக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பாரிஷே கௌடா.