கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி மலர்ந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிலவி வந்த இடியாப்பச்சிக்கல் நீங்கி உள்ளது. 

எடியூரப்பா வருகிற 31-ந் தேதிக்குள் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் வஜுபாய்வாலா உத்தரவிட்டு இருக்கிறார். இதை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா வரும் திங்கட்கிழமை பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அன்றைய தினம் சட்டசபை கூடியதும் எடியூரப்பா தன் ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருவார்.

இதையடுத்து சபாநாயகர் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்துவார். சபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதன் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். கர்நாடகா சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224. இதில் 3 எம்எல்ஏக்களின் பதவியை சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது.

இதில் 111 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவை பெற்றால்தான் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியும். பாஜகவுக்கு தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவின் பலம் 106 ஆக உள்ளது. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் மேலும் 13 பேர் மீது இன்னமும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

அவர்களது பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறித்தால் சட்டசபையில் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அது எடியூரப்பாவுக்கு சாதகமாக மாறும். இதை கருத்தில் கொண்டு சபாநாயகர் ரமேஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே எடியூரப்பாவும், பாஜக மூத்த தலைவர்களும் கர்நாடகா சட்டசபையில் மிக எளிதாக பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சபைக்கு வராமல் இருக்க செய்வது உள்பட பல்வேறு வியூகங்களை அவர்கள் வகுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் யாருடைய ஆட்சியை கவிழ்த்தாரோ அவர்கள் எடியூரப்பாவிற்கு முட்டுக்கொடுக்க முன் வந்துள்ளனர். குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் சிலர் வெளிப்படையாகவே எடியூரப்பாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது பா.ஜ.க. தலைவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நம்பிக்கை ஓட்டெடுப் பின்போது அந்த எம்.எல்.ஏ., க்களின் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால், கர்நாடகா அரசியலில் மீண்டும் திரைமறைவு வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.