1991 கலவரத்தில் தமிழர்களை காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் மரணம்… 58 வயதே ஆன மகாதேவா

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சர்க்கரை மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் 58 வயதே ஆன H.S.மகாதேவா பிரசாத்.

இவர் உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள கர்நாடக மாநிலம் குண்டல்பெட் என்ற ஊரில் 1958 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி பிறந்தார்.

சிக்மகளூர் மாவட்டம் குண்டல்பெட் தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அத்தொகுதியின் செல்லப் பிள்ளளையாக வலம் வந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு  குமாரசாமியின் அமைச்சரவையில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த மகாதேவா சித்தராமையா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது அவருடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

சிக்மகளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்து விட்டது.இவரது மறைவுக்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு காவேரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டபோது ஆயிரக்கனக்கான தமிழர்களை தனது பாதுகாப்பில் வைத்திருந்து காப்பாற்றியிருக்கிறார். இதனால் குண்டல்பெட் பகுதியில் உள்ள தமிழர்களிடையே இவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்து வருகிறது. மகாதேவாவின் மறைவு கர்நாடக வாழ் தமிழர்களுக்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது.