Asianet News TamilAsianet News Tamil

விரைவில், பெண்களே நடத்தும் “மொபைல் கேண்டீன்”!

Karnataka Indira Saviruchi Kaituthu mobile canteen to open on November 1
Karnataka: Indira Saviruchi Kaituthu mobile canteen to open on November 1
Author
First Published Sep 11, 2017, 5:03 PM IST


பெங்களூரில் இந்திரா கேண்டீனை கடந்த மாதம் கர்நாடக அரசு வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய நிலையில், நவம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் பெண்களே நடத்தும் மொபைல் கேண்டீனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணிகளை கர்நாடக மாநில மகளிர் மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி பெங்களூரில் 131 இந்திரா கேண்டீனை கர்நாடக மாநில அரசு அறிமுகப்படுத்தியது. மிகக் குறைந்த விலையில், தரமான, ருசியான சாப்பாடு, காலை, நண்பகல், இரவு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கேண்டீனை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். மேலும், 67 கேண்டீன்களை திறக்கவும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், மாநிலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பெண்களே நடத்தும் “மொபைல் கேண்டீனை” செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கேண்டீன் முழுவதும் பெண்களால் மட்டும் இயக்கப்படும்.

இந்த திட்டத்தை கர்நாடக மாநில மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் பாரதி சங்கர் இன்று அறிவித்தார். அவர் இது குறித்து அவர் கூறியதாவது-

பெண்களே முற்றிலும் பணியாற்றும், நடத்தும் “இந்திரா சவிருச்சி கை துத்து” எனப்படும் மொபைல் கேண்டீன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த கேண்டீன்கள் நவம்பர்1-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செயல்படுத்தப்படும்.

இந்த மொபைல் கேண்டீன்முழுவதும் பெண்களால் இயக்கப்படும். இந்த கேண்டீன் செயல்பாடு முழுவதையும் மாவட்ட “ஸ்த்ரி சக்தி மகளிர் கூட்டுறவு” பொறுப்பேற்று நடத்தும். இதற்காக ஒவ்வொரு கேண்டீனுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

இந்த மொபைல் கேண்டீனில் டிரைவர்களாக வரும் பெண்கள் சமையல் செய்யவும், பொருட்களை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்ய வேண்டும். அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.

இந்த திட்டத்தில் முடிந்தவரை அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவுசெய்துள்ளோம். வாகனம் ஓட்டத் தெரியாத பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, லைசன்ஸ் பெற்றுத்தரப்படும். இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

இந்த மொபைல் கேண்டீனில் உணவுகள் அனைத்தும் மக்களுக்காக மலிவு விலையில் விற்னை செய்யப்படும். இந்த கேண்டீன் வெற்றிகரமாகச் செயல்பட்டால், அனைத்து தாலுகாக்களுக்கும் விரிவு படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios